வரலாற்று ஆய்வாளர் நடன. காசிநாதன் மறைவு: முதல்வர் இரங்கல்
வரலாற்று ஆய்வாளர் மற்றும் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது:
“தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் மறைந்த செய்தியால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். அவர் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள் மற்றும் நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.
தமிழரின் தொன்மையை நிலைநாட்ட பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். வட்டெழுத்துக் கல்வெட்டுகளை சரளமாகப் படிக்கக் கூடிய திறன் கொண்ட காசிநாதன், தமிழகம் முழுவதும் வரலாற்றுக் கருத்தரங்குகள், கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, பல இளைஞர்களுக்கு இந்தத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்த உழைத்தார்.
மேலும், கல்லெழுத்துக் கலை, சோழர் செப்பேடுகள், தமிழர் காசு இயல், ராசராசேச்சுரம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியதுடன், பல நூல்களை பதிப்பித்து தொல்லியல் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். இவரது அளப்பரிய பங்களிப்புக்கு அங்கீகாரமாக, தமிழக அரசு உ.வே.சா. விருது, சிறந்த நூல் விருது உள்ளிட்ட பல விருதுகளை வழங்கியுள்ளது.
பணி ஓய்வுக்கு பிறகும் தீவிரமாக ஆய்வுப் பணிகளை தொடர்ந்த அறிஞரான காசிநாதனின் மறைவு தொல்லியல் துறைக்கு பேரிழப்பு. அவரை இழந்த குடும்பத்தார், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.