அக்.9ல் கோட்டை முற்றுகை – அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவதற்கும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போகின்றனர் என்று அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சிஐடியு சார்பில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.”

தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர், ஓய்வுபெற்ற மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் போராட்டம் அக்.6ம் தேதி 50ம் நாளை நிறைவு செய்துள்ளது. அமைதியான முறையில், பொதுமக்கள் சேவை பாதிக்கப்படாமல் நடந்து வரும் போராட்டத்தில், அரசு எந்த முயற்சியையும் எடுத்து கோரிக்கைகளை தீர்க்கவில்லை.

செப்டம்பர் 1ம் தேதி போக்குவரத்து அமைச்சர் சங்கத்தினரை அழைத்து சந்தித்து, கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக கூறினாலும், நிதித்துறை மூலம் பதில் வழங்குவதாக இருந்தும், இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சம்மேளன் தெரிவித்ததாவது:

“நடைபெறும் போராட்டம் புதிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை தீர்க்க அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அரசு நடவடிக்கை எடுத்துவர வேண்டும். சிஐடியு முன்வைத்த கோரிக்கைகள் அரசு தீர்வு காணும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். அக்.9ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பொதுமக்களும் பேராதரவு தர வேண்டும்.”

Facebook Comments Box