பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி முதல்வருக்கு கடிதம்
தமிழகத்தின் உயர்கல்வி துறையில் பணிகள் தடையின்றி நடைபெற, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது: மாநிலத்தின் பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் நீண்டகாலமாக செயல்பட்டு வருவதால், உயர்கல்வி வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
துணைவேந்தர் இல்லாததால் முக்கியமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்து, கல்வி மற்றும் ஆராய்ச்சி தரம் குறைந்துள்ளது. பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடு, மாணவர்களுக்கான வசதிகள் போன்றவற்றில் பணம் சரியாகச் செலவிடப்படவில்லை.
மேலும், தேர்வுகள் தாமதப்படுத்தப்படுதல், முடிவுகள் வெளியீட்டில் தாமதம், சான்றிதழ் வழங்கலில் நீண்டநேரம் ஆகுதல் போன்ற பிரச்சினைகள் மாணவர்களை அவதிப்படுத்துகின்றன. இதனால் கல்வித் தரமும், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களின் நற்பெயரும் பாதிக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது.
எனவே, இந்நிலையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தை உடனடியாக மேற்கொள்ள முதல்வர் தலையீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று இ. பாலகுருசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.