தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்: ‘எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்’ – நீதிபதி செந்தில்குமார் ஆதங்கம்
“வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால், நீதிபதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்; எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டியதுதான்” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் அவர் ரங்கராஜை கடுமையாக விமர்சித்த வீடியோக்களை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தன்னைப் பற்றி பதிவிடவும் பேட்டியளிக்கவும் தடை விதிக்கவும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட வீடியோக்களை அகற்றவும் கோரிய வழக்கை மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “ரங்கராஜுக்கு 2013-ம் ஆண்டு ஸ்ருதி என்றவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது; அவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஜாய் கிரிசில்டாவுக்கு இதெல்லாம் தெரிந்தே பழக்கம் ஏற்பட்டது. தொழில் பிரச்சனை ஏற்பட்டதும் அவர் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் அவதூறு பேட்டிகள் அளித்து, ரங்கராஜின் நற்பெயரை குலைக்கிறார்,” என்றார்.
பதிலாக, ஜாய் கிரிசில்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், “ஜாய் கிரிசில்டா தன்னுடைய உரிமைக்காகவே சட்டப்போராட்டம் நடத்துகிறார். நாங்கள் பதில்மனு தாக்கல் செய்ய உள்ளோம்,” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி செந்தில்குமார், “ஒரு தீர்ப்பளித்தால் கூட சமூக வலைதளங்களில் நீதிபதிகளின் குடும்பப் பின்னணிவரை விசாரித்து விமர்சிக்கின்றனர். பழைய சம்பவங்களையும் கலர்சாயம் பூசி பதிவிடுகின்றனர். இப்போது யார்மீதும் குற்றம் சாட்டுவது சமூகத்தில் இயல்பாகிவிட்டது. எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்,” என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
பின்னர் வழக்கை அக்.22-க்கு ஒத்திவைத்தார். அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், எஸ். பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர், காங்கிரஸ் எம்.பி. சுதா ஆகியோர் நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தது நீதிபதி செந்தில்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.