கரூர் விபத்தில் ஆட்சியர், எஸ்பி மீதும் தவறு உள்ளது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கரூர் விபத்தில் ஆட்சியரும், எஸ்பியும் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்கு திருட்டில் ஈடுபட்ட பாஜக அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் இன்று (அக்.7) கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை கே.எஸ்.அழகிரி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பிரதமர் மோடி அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. பிஹாரில் 55 லட்சம் பேரின் வாக்குரிமையை பறித்துள்ளனர். இது ஜனநாயக நாட்டில் நடைபெறக் கூடாது. நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினரும் முஸ்லிம்களும். காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற காரணத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக ராகுல் காந்தி தலைமையிலான இண்டியா கூட்டணி போராடி வருகிறது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது:

“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஜிஎஸ்டி ஒரு சீரான வரியாக கொண்டு வர முயற்சி செய்தபோது பாஜக எதிர்த்தது. பின்னர் ஆட்சிக்கு வந்ததும் அதையே கொண்டு வந்து மக்களிடமிருந்து ரூ.55 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட வரி வசூல் செய்துள்ளது. இப்போது தேர்தல் நெருங்குவதால் வரியை குறைத்து ‘தீபாவளி பரிசு’ என கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூடியது.”

கரூர் விபத்து குறித்து அவர் கூறியதாவது:

“தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்வது தேவையில்லாதது. நான்கு பக்கங்களிலும் தவறுகள் நடந்துள்ளன. இதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட குறிப்பிட்டுள்ளார். அதிக கூட்டம் கூடும் எனத் தெரிந்தும் அந்த இடத்தை ஆட்சியரும், எஸ்பியும் ஒதுக்கியது தவறு. அனுபவமின்மையால் இதுபோன்ற தீர்மானம் எடுத்துள்ளனர். எனவே, அவர்கள்மீதும் பொறுப்பு உள்ளது.

விஜய் கைது செய்யப்பட்டால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும். முதல்வர் அத்தகைய முடிவை எடுக்க மாட்டார். கரூர் விபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பு இல்லை. அதிக கூட்டமே விபத்திற்குக் காரணம்; அதை கட்டுப்படுத்த காவல்துறையினரும், கட்சியினரும் தோல்வியடைந்தனர்,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஆனால், அவர் காட்டிய அமைதி அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. சென்னையில் விஜய் வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல்வாதி போல் பேசியுள்ளார். தீர்ப்பை விமர்சிக்கவில்லை, ஆனால் நீதித்துறை நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டும்,” எனவும் கூறினார்.

இத்துடன், “வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் கடந்தமுறை போட்டியிட்டதைவிட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். திமுக கூட்டணி கொள்கை ரீதியாக வலுவாக உள்ளது,” என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.

Facebook Comments Box