கரூர் போன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே நமது பொறுப்பு: கமல்ஹாசன் எம்.பி.
கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையானது. ஆனால், அதை தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதால் துயரம் குறையாது. இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாமல் தடுக்க முயற்சிப்பதே நமது கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று கமல்ஹாசன் நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். அதேபோன்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உடல்நிலை குறித்து அவரது மகன் துரையிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் சம்பவம் குறித்து தினமும் பேச வேண்டியதில்லை என்பது என் எண்ணம். மேலும், அந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி கருத்து தெரிவிப்பது பொருத்தமல்ல.
கரூர் உயிரிழப்பு மிகுந்த சோகமானது, ஆனால் அதை விவாதித்துக் கொண்டே இருப்பது சோகத்தை குறைக்காது. இனி இத்தகைய துயரச் சம்பவங்கள் நிகழாதபடி தடுப்பதே நமது பொறுப்பு. நான் கூறும் கருத்துகளில் இருந்து அரசியல் செய்யலாம்; ஆனால் ஒருவரின் கருத்துகளை அரசியல் நோக்கில் பயன்படுத்தாமல் இருப்பது அனைவரின் கடமை,” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.