ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சனிடம் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடிவு
போலி பாஸ்போர்ட் வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
மதுரை மாநகர காவல் ஆணையாளராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பணியாற்றிய காலத்தில், 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறி, இதுகுறித்து அவர்மீது ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வாராகி என்றவர் 2023-ஆம் ஆண்டு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
அரசுத் தரப்பில், இந்த விவகாரத்தில் டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு தொடர்பில்லை என்றும், அவருக்கு நற்சான்று வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தப்பட்டபோது, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என முடிவிற்கு வந்ததாகவும், இதுகுறித்து மனுதாரருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஐந்து காவல் துறையினர் உட்பட மொத்தம் 59 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவு நிலைமையில் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் விளக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், மதுரை அமர்வில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் உறுதி செய்திருப்பதை குறிப்பிட்டு, போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரரின் கோரிக்கையில் மேலதிக உத்தரவு தேவையில்லை என்று கூறி, வாராகி தாக்கல் செய்த பொதுநல வழக்கை முடித்து வைத்தனர்.