கரூர் விவகாரத்தில் அவசரமாக அரசு நடவடிக்கை எடுக்க முடியாது: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து

“கரூர் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அவசர கோலத்தில் எதையும் செய்ய முடியாது. யாரையும் பழிதீர்க்கும் நோக்கமும் அவசியமும் இல்லை,” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் விளையாட்டுத் துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் நடைபெறும் போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றி பெறுவது பெருமை அளிக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் விநியோகம் சிறப்பாக நடந்து வருகிறது. ஆற்றின் நீர்மட்டம், மழை நிலை, குடிநீர் தரம் ஆகியவை அனைத்தும் அரசு கண்காணிப்பில் உள்ளன. கழிவுநீர் கலக்காமல் தாமிரபரணியைப் பாதுகாக்கும் பணிகள் இடையீடு இல்லாமல் நடைபெற்று வருகின்றன.”

அவர் மேலும் கூறியதாவது:

“தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் கல்லிடைக்குறிச்சி பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுப் பாலத்திற்கான சாலைகள் அமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெரியாமல் சிலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அதிமுக எம்.பி. இன்பதுரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை,” என்றார்.

கரூர் விவகாரத்தைப் பற்றி அவர் கூறியதாவது:

“இந்த விவகாரத்தில் அரசு யாரையும் குறிவைத்து பழிதீர்க்காது. சட்டம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படும். ஒருநபர் ஆணையம் மூலம் தேவையான தகவல்கள் பெறலாம். ஆனால் அவசர கோலத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது,” என்று அப்பாவு வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏக்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box