தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் நீதிமன்றம்

தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகி பவுன்ராஜ் கோரிய ஜாமீன் மனு கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கான விசாரணையில் கரூர் நகர போலீசார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டில் பதுங்கியிருந்த போது தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், அதேபோல் பவுன்ராஜும் செப்.29-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கரூர் காவல் நிலையத்தில் இருவரிடமும் விசாரணை நடத்திய பின்னர், செப்.30-ம் தேதி கரூர் குற்றவியல் நீதிமன்றம் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து பவுன்ராஜ் அக்.6-ம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அக்.8-ம் தேதி கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன், கைதான வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து வழங்க மறுத்தார்.

Facebook Comments Box