உடைந்து விழுந்த அரசுப் பேருந்து படிக்கட்டு — பள்ளிபாளையம் அருகே பயணிகள் அதிர்ச்சி
பள்ளிபாளையம் அருகே ஓடிய அரசுப் பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டில் இருந்து கோவை கோட்டத்திற்கு உட்பட்ட “கே–1” என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து நேற்று காலை ஈரோட்டில் இருந்து மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணம் செய்தது.
அப்போது, பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து பள்ளிபாளையம் அருகே ஆவுத்திப்பாளையம் என்ற இடத்தை வந்தபோது, அதன் பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் எழுப்பினர்.
உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் நேரத்தின் போது, படிக்கட்டு பகுதியில் யாரும் நிற்காததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.
அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்த இந்தச் சம்பவம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.