தவெகவுக்கு வலை விரிக்கும் காங்கிரஸ், பாஜக — விஜய்யின் பிளான் என்ன?

கரூர் துயரத்துக்குப் பிறகு விஜய் இன்னும் வீட்டைவிட்டுக் கூட வெளியே வரவில்லை. ஆனால் அவரை கூட்டணிக்குள் கொண்டுவர இரண்டு பெரிய தேசியக் கட்சிகளும் — காங்கிரஸ், பாஜக — பக்கா பிளானோடு களமிறங்கியுள்ளன.

திமுகவோடு அசைக்க முடியாத பிணைப்புடன் கூட்டணியில் தொடர்கிறது காங்கிரஸ். அதேபோல் பாஜகவும் அதிமுகவை விடாமல் உறுதியாக பிடித்துக்கொண்டுள்ளது. ஆனாலும் தேர்தல் அரசியலில் இதுதான் இறுதி கூட்டணி நிலைப்பாடு என சொல்ல முடியாது.

ஏனென்றால், கரூர் துயரத்துக்குப் பிறகு விஜய்க்கு ஆதரவாக போட்டிப் போட்டி வேலை செய்கின்றன பாஜகவும், காங்கிரஸும். கரூர் துயரத்தில் விஜய் மீது சிறு குற்றச்சாட்டு கூட படவிடாமல், மொத்த பழியையும் திமுக அரசின் மீது திசைதிருப்பும் வகையில் முதல் நாள் முதலே அதிமுக, பாஜக இரண்டும் பேசியது.

கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்ததில் தொடக்கத்தில் அதிர்ச்சியடைந்த விஜய், “என்னால் அல்ல, அரசுதான் காரணம்” என்ற வகையில் வீடியோ வெளியிட பாஜக, அதிமுக இரண்டும் முக்கிய காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு, “திமுக அரசை வீழ்த்த ஒன்றிணையுங்கள்” என பாஜக, விஜய்க்கு அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

ஆனாலும், தொடக்கம் முதலே “பாசிசக் கட்சி” என பாஜகவை விஜய் கடுமையாக விமர்சித்து வருகிறார். எனவே கூட்டணி சாத்தியமா என தவெக தரப்பு யோசிக்கிறது. ஆனால், 1967-ல் திமுகவுக்கு நேரெதிர் கொள்கை கொண்டிருந்த ராஜாஜியே ஆதரவு தந்தது போல, “திமுக அரசை வீழ்த்துவதற்காக பாஜகவுடன் இணைவதில் தவறு இல்லை” என்ற ரீதியில் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது என கூறப்படுகிறது.

சில டெல்லி மேலிட தலைவர்கள் விஜய்யுடன் நேரடியாக பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், விஜய் எந்த முடிவை எடுப்பார் என்பது அடுத்தடுத்த நகர்வுகள் மூலமே தெரியும்.


விஜய்க்கு கைகொடுக்கும் காங்கிரஸ்?

விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து திமுக, பாஜக இரண்டையும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் குறித்து அவர் ஒருபோதும் எதிர்மறையாகப் பேசவில்லை.

மாறாக, ராகுல் காந்தியுடன் விஜய்க்கு தொடக்கம் முதலே நல்ல நட்பு உள்ளது. கரூர் துயரத்திற்குப் பிறகு உடனே விஜய்க்கு போன் செய்து ஆறுதல் கூறினார் ராகுல்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களும் சமீபத்தில் தவெக குறித்து நேர்மறையாகவே பேசுகின்றனர். மேலும், “2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரும், அதில் காங்கிரஸ் பங்கெடுக்கும்” என உறுதியாகக் கூறியுள்ளனர்.

அவர்களின் இந்த நம்பிக்கையின் பின்னணியில் தவெக ஆதரவு இருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெக தரப்பில் டெல்லி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி உள்ளிட்ட ஆஃபர்கள் விஜயால் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதனால், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் “தவெகவுடன் கூட்டணி வைப்பது பாவமில்லை” என வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

தவெகவுடன் கூட்டணி வைத்தால் அது தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காங்கிரஸுக்கு பலம் சேர்க்கும் எனவும் அவர்கள் கணக்கிடுகின்றனர்.


நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு கணிசமான எம்.பிக்கள் இருப்பதால், டெல்லியில் காங்கிரஸுக்கு திமுகவின் ஆதரவு அவசியம். எனவே, அந்த உறவை உடனே முறிக்காது. ஆனால், தவெகவை காரணம் காட்டி தொகுதி பேரத்தை உயர்த்துவது காங்கிரஸின் சாத்தியமான திட்டமாகக் கூறப்படுகிறது.

பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி பாமக, அமமுக, ஓபிஎஸ், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் இன்னும் தவெகவுடன் கூட்டணி வாய்ப்பை திறந்தே வைத்துள்ளன.

இதனால், தேர்தல் நெருங்கும் போது முழுக்க மாறுபட்ட ஒரு கூட்டணி அமைப்பு உருவாகும் வாய்ப்பு அதிகம் எனக் காணப்படுகிறது.

👉 விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுப்பார்களா? அல்லது விஜய் காங்கிரஸை இழுப்பாரா?

👉 அல்லது, தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணி விஜய் தலைமையில் உருவாகுமா?

— என்பதை அரசியல் வட்டாரம் ஆவலுடன் காத்திருக்கிறது.

Facebook Comments Box