கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க அனுமதியும் பாதுகாப்பும் கேட்டு தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் இன்று (அக்.8) மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கரூர் வந்து, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் கரூர் செல்லாதது விமர்சிக்கப்பட்டது.

வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விஜய்யும் அவரது கட்சியினரும் தொண்டர்களை நிராதரவாக விட்டுவிட்டதாக நீதிபதியும் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலம் உயிரிழந்தோரின் உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

இந்த சூழலில், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. டிஜிபியிடம் மனு சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன் கூறினார், “தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்கும், பாதுகாப்பு கேட்கவும் காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார். ஆனால், விஜய் எப்போது கரூர் செல்லவுள்ளார் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

முன்னதாக, இன்று காலை கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ், “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார். அவர் கூறும்போது பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக இருங்கள்; தொடர்ந்து போராடுங்கள் என்று அறிவுறுத்தினார். விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இதற்காக டிஜிபி அலுவலகத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறோம். அரசு நடவடிக்கைகள் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box