நடிகை வழக்கில் மன்னிப்பு கோரினார் சீமான்: வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதேபோல், நடிகை தரப்பும் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்படவுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2011-ம் ஆண்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டதால், சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
செப்டம்பர் 24 அன்று விசாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் கூறியதாவது, “இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்த பேட்டியும் தரக்கூடாது. உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்”.
இந்த நிலையில், சீமான் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை குறித்த கருத்துகளை இனி தெரிவிக்க மாட்டேன் என்றும் திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நடிகை தரப்பும் சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெற்றுள்ளதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இரு தரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.