அக்.14-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:
“காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித் தாக்குதல் உலகத்தையே உலுக்கி வருகிறது. இதை நிறுத்துவதற்காக மத்திய பாஜக அரசு, இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து உடனடியாக போரினை நிறுத்தவும், அமைதி நிலைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதேசமயம், போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்திய அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்தும்.
இந்த தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து கட்சிகளும் இதனை ஆதரிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். காசா மீதான தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்,” என்றார்.
அதே நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது: “காசாவில் அமைதி நிலவுவதற்காக உலக சமூகத்தோடு இணைந்து இந்தியாவிலும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அங்குள்ள குழந்தைகளின் முகத்தில் மீண்டும் புன்னகை மலர வேண்டும் என்பதே எங்கள் ஒரே நோக்கம்.”
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்ததாவது: “இஸ்ரேலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. இது ஒரு மாநில சட்டப்பேரவை தீர்மானம் மட்டுமல்ல; இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய தீர்மானமாக இருக்கும்.”
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: “பாலஸ்தீனத்தின் பக்கம் இந்தியா நிற்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. மத்திய அரசு மௌனமாக இருந்தாலும், தமிழகத்தின் குரல் ஐ.நா. வரை சென்று சேரும்.”
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்ததாவது: “இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில் தலையிடக் கூடாது என்றாலும், ஒரு நாட்டின் விடுதலையை மறுப்பது சரியல்ல. எனவே, இந்திய மக்களவையிலும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.”
விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “இந்திய அரசு பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல் மக்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.”
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன், மேயர் ஆர். பிரியா, மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, கொமதேக துணை பொதுச் செயலாளர் கே. நித்தியானந்தன், ஐ.யூ.எம்.எல் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர், மார்க்சிஸ்ட் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, சிபிஐ(எம்எல்) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.