சொத்துவரி முறைகேடு வழக்கு: மதுரை மேயரின் கணவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கில், மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு வழக்கில் நான் ஆகஸ்ட் 12 அன்று கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளேன். எந்த குற்றத்தையும் நான் செய்யவில்லை; முன்விரோதம் காரணமாகவே என் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. எனது உடல் நலம் சரியில்லாத நிலையில் இருப்பதால் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் மனுதாரர் குற்றமற்றவர்; அவரை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளனர். உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார். இதே வழக்கில் பிறர் ஜாமீனில் உள்ள நிலையில் இவருக்கு மட்டும் மறுப்பது நீதியல்ல” என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், “ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது; எனவே ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதையும், மனுதாரர் சிறையில் இருந்த காலத்தையும் கருத்தில் கொண்டு, மதுரை நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அடுத்த 4 வாரங்களுக்கு தினமும் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

Facebook Comments Box