ஆளுநருடன் மோதலா? – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம்
“புதுச்சேரி வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். நிர்வாக நடவடிக்கைகளில் சில நேரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு, கோப்புகள் திரும்ப அனுப்பப்படுவது வழக்கமானதே. ஆனால், தனி மாநில அந்தஸ்து கோரிக்கை எப்போதும் தொடரும்,” என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“எங்கள் ஆட்சி கட்சிப் பாகுபாடின்றி புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகச் செயல் படுகிறது. எதிர்க்கட்சிகளை வேறுபடுத்தாமல், எல்லா தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்கி உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
அப்போது, கூட்டணி கட்சியான பாஜக எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன் கூறிய “எங்கள் தொகுதியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை” என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்:
“அனைத்து தொகுதிகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.200 கோடி மத்திய அரசு நிதி வந்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்; அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. அவர் முன்னர் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற பணிகள் என்னென்ன என்பதை அவரே தெரிந்து கொள்ளலாம்,” என்றார்.
அவர் அமைச்சர் பதவியில் இல்லாததால் குற்றச்சாட்டு கூறுகிறாரா என்ற கேள்விக்கு, “இப்போதுதான் அவர் தனது தொகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்த்து வருகிறார்; பார்த்தவுடன் அனைத்தும் தெளிவாக தெரியும்,” எனச் சொன்னார்.
பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றிக் கேட்டபோது, “பட்டியலினத்தவருக்கு இரண்டு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கிய ஒரே ஆட்சி நமது ஆட்சிதான். முன்னர் கொடுத்ததுபோல இப்போதும் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் கல்வித் துறை இயக்குநர் நியமன கோப்புகள் துணைநிலை ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளன; விரைவில் ஒப்புதல் வரும்,” எனத் தெரிவித்தார்.
ஆளுநருடனான உறவு குறித்த கேள்விக்கு, “நாங்கள் விரும்புவது புதுச்சேரி முன்னேற்றமே. நிர்வாக ரீதியாக சில கோப்புகள் மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பப்படுவது இயல்பானது. ஆனால் எந்த தடையும் இல்லாமல் அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தனி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கை எப்போதும் நீடிக்கும்; மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.