ஜிஎஸ்டி மாற்றங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் வாகனப் பதிவு 35% உயர்வு
புதுச்சேரியில், ஜிஎஸ்டி புதிய சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து வாகனப் பதிவு எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல், இந்திய அரசின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறையில் வந்துள்ளன. இதன் தாக்கமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொருளாதாரச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக வணிகவரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வணிகவரித்துறை செயலரும் ஆணையருமான யாசின் சவுத்ரி கூறியதாவது: “புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் கணக்குகள் படி, வாகனப் பதிவுகளில் 35% உயர்வு பதிவாகியுள்ளது. அதில், கார்கள் 37%, இருசக்கர வாகனங்கள் 35%, மூவச்சக்கர வாகனங்கள் 38%, சரக்கு வாகனங்கள் 53%, பேருந்துகள் 50% உயர்ந்துள்ளன.
மேலும், முக்கிய மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனை அளவுகள் 15% வரை உயர்ந்துள்ளன. மக்களின் தினசரி பயன்பாட்டு பொருட்களில் கூட விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, ஹேர் ஆயில் விற்பனை 48%, நெய் 49%, பற்பசை 10% அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி விகித மாற்றங்களின் பொருளாதார விளைவுகளை வணிகவரித்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறைந்த வரி விகிதங்களின் நன்மைகள் பொதுமக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பண்டிகைக் கால விற்பனை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இணைந்து, வருவாய் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என யாசின் சவுத்ரி தெரிவித்தார்.