தஞ்சாவூர் ஆடுதுறை அரசு பள்ளி சுகாதார வளாகத்தில் தடுப்புச் சுவர் அமைப்பு நிறைவு — 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் விடுபட்டிருந்த தடுப்புச் சுவர் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அலட்சியம் காட்டிய இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.34 லட்சம் செலவில் சுகாதார வளாகம் உருவாக்கப்பட்டது. கடந்த 6 ஆம் தேதி பேரூராட்சி தலைவர் அதன் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். ஆனால், வளாகத்தில் தடுப்புச் சுவர் இல்லாமல் கழிவு வெளியேற்றும் இருக்கைகள் வெளிப்படையாக காணப்பட்டதால், அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுப்புச் சுவர் கட்ட உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, திருச்சி மண்டல செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில், தஞ்சாவூர் பேரூராட்சி உதவி இயக்குநர் மாகீர் அபூபக்கர், உதவி செயற்பொறியாளர் சதீஷ் பாபு உள்ளிட்டோர் அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் பணியை முகாமிட்டு, சுவர் கட்டும் பணியை நிறைவு செய்தனர்.
இந்நிலையில், பணியில் கவனக்குறைவு மற்றும் கண்காணிப்பு தவறுக்கு ஆடுதுறை செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் ரமேஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இருவரும் சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.