69% இடஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்
69 சதவீத இடஒதுக்கீடு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் போது, முதலில் பொதுப்போட்டி பிரிவுக்கான 31 சதவீத இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். இதில் சாதி அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது.
அதன்பின், பின்னடைவுப் பணியிடங்கள் ஏதேனும் இருந்தால், அவை உரிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரால் நிரப்பப்பட வேண்டும். அதன் பின்னரே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களை அவரவர் வகுப்பினரால் நிரப்ப வேண்டும்.
பொதுப்போட்டி அல்லது பின்னடைவுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலினத்தவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் இடஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களாக கருதப்படக் கூடாது என்பது சமூகநீதியின் அடிப்படை.
ஆனால், இந்த விதி பின்பற்றப்படாமல், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பொதுப்பிரிவிலும் பின்னடைவுப் பிரிவிலும் நியமிக்கப்பட்டவர்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக கணக்கிட்டுள்ளது. இதன் விளைவாக, இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய காவல் சார் ஆய்வாளர் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள ஆள்தேர்வு அமைப்புகள் இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தும் விதத்தில் அடிக்கடி தோன்றும் குழப்பங்களைப் பார்க்கும்போது, கடந்த காலங்களில் அவை விதிகளை முறையாக பின்பற்றியதா என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு நடைபெற்ற அனைத்து ஆள்தேர்வுகளிலும் அந்த இடஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதைப் பற்றிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக, உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.