அடக்கி வாசிக்கும் ‘உடன்பிறவா’ சகோதரர்கள் | உள்குத்து உளவாளி
கட்சியின் அடித்தளத்தில் நடக்கும் உள்குத்து சம்பவங்கள் பெரும்பாலும் தலைமைக் கழகத்துக்கு சென்று சேர்வதில்லை. இதனால், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பலர், மேலதிகாரிகளால் பாதிக்கப்பட்டபோதும் “எங்கே போய்ச் சொல்ல?” என்ற மனக்குமுறலுடன் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.
அப்படிப் புலம்பி இருக்கும் உறுப்பினர்களை ஆறுதல்படுத்தும் நோக்கில், கட்சித் தலைவர் சமீபத்தில் மாவட்ட வாரியாக ‘உடன்பிறவா’ சகோதரர்களை அழைத்து நேரில் பேசி வருகின்றார். இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த சகோதரர்களுடன் நேர்முகமாகப் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த குறைகளைத் தெரிவித்த பின்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையில், யார் யார் புகார் தெரிவிக்க வருகிறார்கள் என்பதை மாவட்ட அளவிலான புள்ளிகள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளை ஒரு “ஃபைல்” ஆக தயாரித்து தலைவரிடம் முன்வைக்கிறார்களாம்.
இதனால், குறைகளை சொல்ல வந்தவர்களிடம் தலைவர் பேசத் தொடங்கியதும், “உங்கள்மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருக்கே…” என்று அந்த பட்டியலை வாசித்து வாயடைக்க வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்குப் பிறகு, குறைகளை பகிர வந்தவர்கள் மேலும் எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விடுகிறார்களாம். ஆரம்பத்தில் “தலைவர் நம்மை நேரில் அழைத்து குறைகள் கேட்கிறார்” என்று மகிழ்ந்திருந்த ‘உடன்பிறவா’ சகோதரர்கள், இப்போது “நமக்கேனு வம்பு?” என்று அடக்கி வாசித்து மவுனித்துப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.