தன்னெழுச்சியாக அதிமுகவில் சேரும் தவெக தொண்டர்கள் – கனவு சிதைவால் கலங்கும் தினகரன்!
கரூர் சம்பவம் குறித்து இதுவரை விஜய்யை நேரடியாக குறிக்காமல், பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திடீரென விஜய்யை குறிவைத்து விமர்சனம் தொடங்கியுள்ளார். அதோடு, இபிஎஸ்ஸையும் சேர்த்து தாக்குகிறார். அவரது இந்த திடீர் மாற்றத்துக்குப் பின்னால், தவெக (தமிழக வெற்றி கழகம்) உடனான தனது கூட்டணிக் கனவு சிதைந்து விடுமோ என்ற கவலைதான் காரணம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
“கரூர் சம்பவத்துக்கான தார்மிக பொறுப்பை விஜய் ஏற்க வேண்டும். அது குற்றத்தை ஒப்புக்கொள்வது அல்ல. இதில் முதல்வர் ஸ்டாலின் அனுபவத்துடன் நிதானமாக செயல்படுகிறார்” என்று விஜய்யை விமர்சித்து, முதல்வரை பாராட்டிய தினகரன், “கரூர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தவெகவுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உயிரிழப்பை கூட அரசியல் சாதனையாக மாற்றி கூட்டணி பேச்சு நடத்துவது கண்டிக்கத்தக்கது. தவெகவை கூட்டணிக்குள் சேர்க்கவே ஆளுங்கட்சியைக் குற்றம் சாட்டுகிறார் பழனிசாமி,” என்று கூறியிருந்தார்.
இந்த கருத்திலிருந்தே தினகரனின் ஆதங்கம் வெளிப்படுகிறது. பாஜக கூட்டணியை விட்டு விலகிய பிறகு, திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாத தினகரனுக்கு மீதமிருந்த ஒரே வழி தவெக கூட்டணியே. அதனால் தான், முந்தைய காலங்களில் “எதுவும் நடக்கலாம்” என்று கூறி, தவெகவுடன் கூட்டணி வாய்ப்பு திறந்துவிட்டார்.
ஆனால் தற்போது நிலை மாறியுள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் கட்சி மற்றும் அதிமுக இடையே கூட்டணி பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு வலுசேர்க்கும் வகையில், தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த இபிஎஸ்ஸை, தவெக தொண்டர்கள் கட்சிக் கொடிகளுடன் வரவேற்றனர். தருமபுரியில் பழனிசாமிக்காக விஜய் படத்துடன் ஃப்ளெக்ஸ் பதிக்கப்பட்டது. மேலும், இபிஎஸ் விஜய்யை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் வந்தன — இரு தரப்பும் இதனை மறுக்கவில்லை.
இவ்வாறாக, அதிமுக–தவெக கூட்டணி இயல்பாக உருவாகும் சூழல் உருவாகியுள்ளதால், தினகரனின் நம்பிக்கைக்குக் கேள்விக்குறி எழுந்துள்ளது. பாஜக இல்லையெனில் தவெகவுடன் கைகோர்க்கலாம் என நம்பியிருந்த தினகரன், அந்த வாய்ப்பும் அதிமுகவால் தடுக்கப்பட்டுவிடும் எனப் பதற்றம் அடைந்துள்ளார்.
அதிமுகவுடன் இணைந்து செயல்பட தன்னெழுச்சியாக தவெக தொண்டர்கள் நகரும் இந்நிலையில், தினகரனின் அரசியல் கனவு மெல்ல சிதைவதைக் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.