கரூர் சம்பவத்துக்கு பின் விஜய் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார்: உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்

கரூரில் செப். 27-ல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 வயது குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தினேஷ் வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், தவெக நிர்வாகிகள் கூறியதாவது:

“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து கட்சித் தலைவர் விஜய் தப்பி ஓடிவிட்டார் என்று மற்றும் நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்ற கருத்துக்கள் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்,” என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து, பாஜகவின் உமா ஆனந்தன் அக்டோபர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, வழக்கு அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தது.

தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம் வாதிட்டதாவது:

“உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தவெக இணைக்கப்படவில்லை. எங்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. பொது ஒழுங்கை நிலைநாட்டவே விஜய் அந்த இடத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அக்டோபர் 3-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்கக் கோரும் மனுவை அடிப்படையாகக் கொண்டது,” என அவர் வாதமிட்டார்.

தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துவருகிறது.

Facebook Comments Box