21 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இருமல் மருந்து விவகாரம்: திமுக அரசை அதிமுக 5 கேள்விகளால் சுட்டது!
21 குழந்தைகள் உயிரிழக்க வழிவகுத்ததாக கூறப்படும் ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்து தொடர்பாக, அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக திமுக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டதாவது:
“21 குழந்தைகள் உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்த பிறகு, அதற்குப் பிந்தைய நடவடிக்கைகள் என்ன?
மருத்துவத் துறை சார்பில் இதுகுறித்து ஏதேனும் சுற்றறிக்கை அல்லது அரசாணை வெளியிடப்பட்டதா?
ஏற்கனவே மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்து, அதற்கான அறிவிப்பு வெளியிட்டீர்களா?
முழு தமிழகத்திலுமுள்ள மருந்தகங்களில் இருந்து ஸ்ரீசன் நிறுவன மருந்துகள் முழுமையாக திரும்பப் பெறப்பட்டுள்ளனவா? என்பதை திமுக அரசு உறுதி செய்ததா?
முதல்வரின் புகழைப் பெருக்க விளம்பரங்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன; ஆனால் 21 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்துகளை தடை செய்ததற்கான அறிவிப்பு எந்த செய்தித்தாள்களிலும் அல்லது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டதா?” என அதிமுக கேட்டுள்ளது.
இருமல் மருந்து சர்ச்சையின் பின்னணி
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை அருந்திய மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலுள்ள பல குழந்தைகள் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி, 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் இந்த இருமல் மருந்து என்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த இரண்டு மாநிலங்களின் அரசுகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி, கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரின.
இதையடுத்து, தமிழக அரசு ‘கோல்ட்ரிப்’ மருந்தின் விற்பனைக்கு தடை விதித்தது. பின்னர், மத்தியப் பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுங்குவார்சத்திரம் தொழிற்சாலைக்கு வந்து, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மாதிரிகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், ‘கோல்ட்ரிப்’ நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் (75) அவர்களை மத்தியப் பிரதேச போலீஸார் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனா நகர் 2-வது தெருவில் உள்ள இல்லத்தில் நேற்று அதிகாலை கைது செய்தனர்.