தமிழகமெங்கும் இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறைச் செயலர் ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“இந்த ஆண்டுக்கான அக்டோபர் 2-ம் தேதியிலான கிராமசபைக் கூட்டம் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று (அக். 11) மாநிலம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் குறைந்தது 10,000 ஊராட்சிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக உரையாற்றுகிறார். அதன் பின்னர் கூட்டங்களில் மொத்தம் 16 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெறும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இதில் தண்ணீர் வசதி, குப்பை அகற்றம் உள்ளிட்ட உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய மூன்று முக்கிய தேவைகள் குறித்து பேசப்படும். அவை ஊரக வளர்ச்சி துறையின் இணைய தளத்தில் பதிவாகும். பின்னர், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அவை பரிசீலனை செய்யப்பட்டு குறுகிய காலத்துக்குள் தீர்வு காணப்படும்,” என்றார்.
மேலும், சாதி பெயர்கள் கொண்ட தெருக்கள், குடியிருப்புகள், சாலைகளின் பெயர்களை நீக்கும் அரசாணை குறித்தும் கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.