கரூர் உயிரிழப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஏன் விசாரித்தார்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கை மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வரும் நிலையில், அதே வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தவெக தரப்பில் தொடரப்பட்ட மனு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றம், அனைத்து வாதங்களையும் கேட்டபின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க கோரி வில்லிவாக்கம் தினேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தார். அவர், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், சி.ஆர்யமா சுந்தரம் ஆகியோர் வாதிட்டனர்.

அவர்கள் கூறுகையில், “தனி நீதிபதி வழக்கில் தொடர்பில்லாத விஜய்யை குற்றம்சாட்டி, வாதிக்க வாய்ப்பே வழங்கவில்லை. போலீஸார் சட்டம்-ஒழுங்கு காரணமாக இடத்தை விட்டு செல்லச் சொன்னதால் தான் விஜய் அங்கிருந்து சென்றார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனம் அநியாயம். மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வரும் இதே வழக்கை, தனி நீதிபதி மீண்டும் விசாரித்து வேறு உத்தரவு வழங்கியிருப்பது நடைமுறை மீறல். எனவே, உச்ச நீதிமன்றமே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும்” என்றனர்.

தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி. வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் எதிர்வாதம் மேற்கொண்டனர்.

அவர்கள் கூறுகையில், “உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. முதல்வர் நேரடியாக கரூரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை குழு ஏற்கனவே பணியில் இறங்கியுள்ளது. கூட்டம் தாமதமாகத் தொடங்கியதே நெரிசலுக்குக் காரணம்; அதற்கு விஜய் தார்மீகரீதியாக பொறுப்பு ஏற்க வேண்டும்” என்றனர்.

இதனையடுத்து நீதிபதிகள், “கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் நிலையில், அதே விவகாரம் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியிடம் சென்றது ஏன்? இரண்டு வெவ்வேறு உத்தரவுகள் ஒரே நாளில் எப்படிக் கொடுக்கப்பட்டன?” எனக் கேள்வி எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “போலீஸாரின் அலட்சியமே 41 உயிரிழப்புகளுக்குக் காரணம். இரவோடு இரவாக அனைத்து உடல்களுக்கும் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டது. விசாரணை இரண்டு பக்கம் – தனி ஆணையமும் சிறப்பு புலனாய்வு குழுவும் – என குழப்பமாக உள்ளது. செயற்கை மின்தடை, சமூக விரோதிகள் காரணமாக பலர் இறந்துள்ளனர். எனவே, சிபிஐ விசாரணை அவசியம்” என வாதிட்டனர்.

நீதிபதிகள், “உடனடியாக 41 பிரேத பரிசோதனை எவ்வாறு முடிக்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், அருகிலுள்ள மாவட்ட மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

Facebook Comments Box