“கூட்டணிக்காக தொடர்ந்து செய்த தியாகங்களுக்கு இனி முடிவு…” – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் கட்சி இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்காக செய்த தியாகங்களுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என காங்கிரஸ் காரியக்குழுவில் வலியுறுத்துவேன் எனவும், எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், சிவகாசி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தபால் துறை சார்பில் நடைபெற்ற தபால் தலைக் கண்காட்சியைப் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்த அண்ணா திமுக இன்று ‘அமித் ஷா திமுக’வாக மாறியுள்ளது. சிலர் வேறு கட்சிக் கொடிகளை கொண்டு வந்தாலே கூட்டணி வந்துவிட்டது என்று நினைக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிச்சாமியின் கைகளால் அதிமுகவின் முடிவுரை எழுதப்படுகிறது. தற்போது அந்தக் கட்சி தவறான வழியில் செல்கிறது; இதனால் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“1996-ம் ஆண்டில் அதிமுக கட்சி 27% வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அது 21% ஆகக் குறைந்துள்ளது என்பது அதிர்ச்சியானது. வரும் 2026 தேர்தலில் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது உறுதி. ஆனால் அந்த தாக்கத்தின் அளவு எவ்வளவு என்பது வாக்குப் பெட்டி திறக்கும் வரை தெரியாது.
இண்டியா கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உருவாகப் போகிறது, ஆனால் அது அதிமுக அல்ல என்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை கூட்டணிக்காக ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளது. இனி நாங்கள் நமது உரிமையை வலியுறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கூட்டணிக்காக தொடர்ந்த தியாகங்களுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளோம்,” என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.