இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்
இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் 30 மீனவர்கள் மீது, எல்லை மீறி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், மன்னார் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மீனவர்களை அக்டோபர் 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே, மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சிறை மீனவர்களின் குடும்பத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள் ஜேசுராஜ், என்.ஜெ.போஸ், எமரிட், சகாயம், எமரால்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை படகுகளுடன் தாயகம் திருப்பி அனுப்ப, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சிறையில் உள்ள மீனவர்களில் ஒருவரின் மனைவி மஞ்சு, மனஅழுத்தத்தால் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானம் கொடுத்து உதவி செய்தனர்.