திருமாவளவனின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு கமல்ஹாசன் எம்.பி வலியுறுத்தல்

“திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது. அவர் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறை விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்ற காரை ஒரு இருசக்கர வாகன ஓட்டுநர் வழிமறித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டிருந்தார்:

“உயர் நீதிமன்றம் அருகே நடந்த வழிமறிப்பு சம்பவம் தற்செயலானது அல்ல; திட்டமிட்ட சதி என தெரியவருகிறது. இதற்குப் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இருப்பது எங்கள் விசாரணையில் உறுதியாகத் தெரிகிறது. எனவே, தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதனை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்.”

திருமாவளவனின் இந்தப் பதிவை இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்து,

“இந்த சம்பவம் திட்டமிட்டது என தெரிகிறது. தமிழக அரசு உடனடியாக திருமாவளவனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அந்தப் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கமல்ஹாசன்,

“தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது; தம்பி பா.ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறை விசாரணை வேகமாக நடக்க வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box