பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு தவாக வலியுறுத்தல்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. வேல்முருகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
“தமிழர் பண்பாடு என்பது நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என பல்லாண்டுகளாக வளர்ந்து வந்த ஒரு நாகரிகச் செல்வம். அந்த செல்வத்தை பொழுதுபோக்கு என்ற பெயரில் அழிக்க முயல்கிறது பிக்பாஸ் எனும் வணிக நிகழ்ச்சி.
தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்யும் அளவுக்கு சென்றுவிட்ட இந்த நிகழ்ச்சி உடனடியாக தடுக்கப்பட வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளன. இவை எதுவும் தமிழர் பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாகாது.
தமிழர் குடும்பம் அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகளை மையமாகக் கொண்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இளைஞர்களிடம் வெறுப்பு, வன்முறை, தனிமனித மோதல்கள் போன்ற தீய எண்ணங்களை ஊட்டுகிறது. இது குடும்ப நல்லிணக்கத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் எதிரானது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்திலேயே அல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு மற்றும் சமூக பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இது ஒரு வணிக நோக்கில் செயல்படும் கார்ப்பரேட் நிகழ்ச்சி. மக்கள் விழித்துணர்ந்து இதனை நிராகரிக்க வேண்டும்.
எதிர்காலத் தலைமுறையின் மனநிலையை மாசுபடுத்தும் இந்த நிகழ்ச்சி கல்வி, ஆரோக்கியம், சமூக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு எதிரான ஊடகத் தாக்குதலாக உள்ளது. எனவே, தமிழ் மரபையும் எதிர்கால சந்ததியையும் காக்கும் கடமையின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும்.”
இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.