“தவெகவை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் செய்வது குள்ளநரித்தனம்” – டிடிவி தினகரன் கடும் தாக்கு
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “கரூர் துயரச் சம்பவத்தில் தவெக தொண்டர்கள் துயரத்தில் இருக்கும் நிலையில், அவர்களை கூட்டணிக்குள் இழுக்கும் வகையில் செயல்படுவது எடப்பாடி பழனிசாமியின் குள்ளநரித்தனம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று அரூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற டிடிவி தினகரன், அரூர் சட்டமன்ற (தனி) தொகுதிக்கான அமமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர். முருகனை அறிவித்தார்.
அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“அமமுகவை தவிர்த்து யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற அரசியல் நிலை தற்போது உருவாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அமமுக அமைக்கும் கூட்டணிதான் வெற்றி கூட்டணியாக இருக்கும். எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
எந்த கூட்டணியிலும் இருந்தாலும், அரூர் தொகுதியில் ஆர்.ஆர். முருகன் தான் எங்கள் வேட்பாளர். சோளிங்கர் உள்ளிட்ட சில தொகுதிகளில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் தற்போதைக்கு யாரோடும் கூட்டணியில் சேரும் முயற்சியில் இல்லை. 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். 2021-இல் வெற்றி பெறவில்லை என்றாலும், துரோகம் செய்த பழனிசாமியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தோம்.
துரோகம் செய்து வெற்றி பெற முடியாது என்பதற்கான அரசியல் பாடத்தை வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான திமுக (எடிஎம்கே) கற்றுக்கொள்ளும்.
பழனிசாமி தற்போது விரக்தியில் தரம் தாழ்ந்து பேசுகிறார். தனது கூட்டங்களில் பிற கட்சியின் கொடியை காட்டி ஏமாற்றுகிறார். கரூர் துயரச் சம்பவத்தில் தமிழகமே துயரத்தில் இருக்கும் நிலையில், தவெக தொண்டர்களை குள்ளநரித்தனமாக கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி துரோகத்தின் உச்சம்.
பழனிசாமியின் தலைமையில் கட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகக்கு எதிராக பேசி, மோடிக்கு துரோகம் செய்தவர் இப்போது பச்சோந்தியாக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இதை அந்த கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் கூட விரும்பவில்லை.
தவெக கட்சி இன்னும் புதியது. அவர்கள் கொடுமையான விபத்து காரணமாக அதிர்ச்சியில் உள்ளனர். கரூர் சம்பவம் ஒரு விபத்து தான் — அதற்கு விஜய் தார்மிக பொறுப்பு ஏற்கலாம்; ஆனால் குற்றம் சாட்டப்படக்கூடாது.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியைத் தோளில் வைத்துக் கொண்டு செல்கிறார். அவரின் பயணம் வெற்றியடையட்டும்,” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.