ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை தண்டனை, ரூ.24 லட்சம் அபராதம்!
ஆம்பூர் கலவர தொடர்பான வழக்கில் 161 பேர் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.24 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையாக காயமடைந்த 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் மீதமுள்ள 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு திருப்பத்தூர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை அறிவித்தது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகிலுள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா 2015-ம் ஆண்டு மே 24-ம் தேதி காணாமல் போனதாக, அவரைத் தேடி தர வேண்டும் என பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இதையடுத்து, பள்ளிகொண்டா போலீசார் ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது (26) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணைக்குப் பிறகு, எப்போதும் அழைத்தால் வருவேன் என்று எழுத்து பெற்றுக் கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றும் உயிரிழந்தார்.
இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் சபாரத்தினம், காவலர்கள் அய்யப்பன், முரளி, நாகராஜ், சுரேஷ், முனியன் ஆகியோர் எனக் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 500-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், 2015 ஜூன் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூர் – சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பலர் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். ஷமில் அகமது மரணத்திற்கு நீதி கோரி நடந்த போராட்டம் மத கலவரமாக மாறி, பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
காவல்துறையினர் தடியடி நடத்தி சூழ்நிலையை கட்டுப்படுத்தினர். பெரும் தாக்குதலால் நெடுஞ்சாலை போர்க்களம் போல் மாறியது. இதில் பெண் காவலர் ராஜலட்சுமி, காவலர் விஜயகுமார், அப்போதைய வேலூர் எஸ்.பி. செந்தில்குமாரி உள்ளிட்டோர் காயமடைந்தனர். மொத்தம் 54 காவலர்கள் (15 பெண் காவலர்கள் உட்பட) காயமடைந்தனர். இதுகுறித்து 191 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 10 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் தீர்ப்பு ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இன்று மதியம் 1 மணியளவில் நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பை வாசித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட 191 பேரில் 161 பேர் விடுவிக்கப்படுவதாகவும், ஆம்பூரைச் சேர்ந்த பைரோஸ், முனீர், ஜான் பாட்ஷா உள்ளிட்ட 22 பேர் குற்றவாளிகள் எனவும் அறிவிக்கப்பட்டது.
அவர்களிடம் மொத்தம் ரூ.23,99,152 அபராதம் வசூலிக்கப்படும் என்றும், கடுமையாக காயமடைந்த பெண் காவலர் ராஜலட்சுமி, காவலர் விஜயகுமார் ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்றும், லேசான காயமடைந்த 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த இழப்பீட்டு தொகை, தற்போது உயிரிழந்த முன்னாள் ஆம்பூர் எம்.எல்.ஏ அஸ்லாம்பாட்சாவின் சொத்துகளை பறிமுதல் செய்து வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பி.டி. சரவணன் ஆஜரானார்.