சாதாரண ஓட்டு கட்டடமா… கிறிஸ்தவ சப்பலா..? – குமரியில் மீண்டும் வெடித்த விவாதம்!
கன்யாகுமரி மாவட்டம் ஒவ்வொரு தேர்தலுக்கும் மத அரசியலை மறைமுகமாக பிரதிபலித்து வரும் நிலையில், ஒரு ஓட்டு கட்டடத்தை மையமாகக் கொண்டு மதப்பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
1941-ஆம் ஆண்டு, திருவிதாங்கூர் மன்னர் பாலரவிவர்மா தனது உறவினர்கள், நண்பர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டபோது சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் ஓட்டு கட்டடத்தில் காசநோய் மருத்துவமனையை தொடங்கினார். தற்போது அது நவீனப்படுத்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியாக இயங்கி வருகிறது. ஆனால், பழமையான அந்த ஓட்டு கட்டடம் இன்னும் பிறப்பு-இறப்பு பதிவாளர் அலுவலகமாக உள்ளது.
அந்த கட்டடத்தின் ஓரங்கத்தில் இருந்த சிறிய அறை, மன்னர் காலத்தில் கிறிஸ்தவர்களின் ஜெப அறையாக பயன்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதையே “சிற்றாலயம்” எனக் கருதி, மருத்துவமனைக்கு வரும் கிறிஸ்தவர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பு கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்சினை நீடித்து வருகிறது.
சமீபத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் வெளியிட்ட வீடியோவில், “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கிறிஸ்தவ சப்பல் ஏன் மூடப்பட்டுள்ளது? நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்போது இறைவனை வேண்டிக்கொள்வதற்கான இடம் தேவை. இதை அரசு, நிர்வாகம் உடனே திறக்க வேண்டும். இல்லையெனில் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும்” எனக் கூறினார்.
அவரது கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், மருத்துவமனை வளாகம் மத்திய-மாநில உளவு அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் கடந்த மாதம் வருகை தந்தபோது, “நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள இந்த ஆலயம் பொதுமக்கள் வழிபடத் திறக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார். அதற்கேற்ப அன்றே பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் நாகர்கோவில் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா, “முன்னர் ஆட்சியர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டபோது இங்கு ஆலயம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருந்தும், சிலர் தேர்தல் நலன் கருதி கன்யாகுமரி மாவட்ட அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். இதை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.