திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை: உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
மதுரை உயர் நீதிமன்ற கிளை, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு மற்றும் கோழி பலி செய்வதற்கு தடை விதித்துள்ளது. அதேபோல், அந்த மலையை ‘சிக்கந்தர் மலை’ என குறிப்பிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் பிராணி பலியிடல் மற்றும் அசைவ உணவு வழங்கல் தடை செய்யவேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தல் தடுக்க வேண்டும் என்றும், மலையை சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது என்றும், மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்றும் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோரும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அதே நேரத்தில், சிக்கந்தர் தர்கா பகுதியை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் அனுமதி தரவேண்டும் என்று தர்கா அறங்காவலர் ஒசிர்கான் மனு அளித்தார். தர்கா வரும் பக்தர்களுக்காக சாலை, மின்விளக்கு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அப்துல் ஜப்பார் மனு தாக்கல் செய்தார். அதேபோல், திருப்பரங்குன்றம் மலையை “சமணர் குன்று” என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீ லட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமியும் மனு தாக்கல் செய்தார்.
இந்த ஆறு மனுக்களும் நீதிபதிகள் ஜெ.நிஷா பாஷ் மற்றும் எஸ்.ஸ்ரீமதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டன. நீதிபதி நிஷா பாஷ் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி ஸ்ரீமதி, “திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும்; ‘சிக்கந்தர் மலை’ அல்லது ‘சமணர் குன்று’ என்று அழைக்கக் கூடாது. தர்காவில் கந்தூரி விழா நடத்தி ஆடு, கோழி பலியிடுவது, ரம்ஜான், பக்ரீத் தொழுகை நடத்துவது போன்றவற்றிற்கு உரிய நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். அதுவரை எந்தவித தொழுகையோ, பலியோ நடக்கக் கூடாது” என்று தீர்ப்பளித்தார்.
இரு நீதிபதிகளும் வேறுபட்ட தீர்ப்புகள் அளித்ததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அவர் கூறிய உத்தரவில், “1908 மற்றும் 1923 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட அறிவிப்புகளின்படி, திருப்பரங்குன்றம் மலையின் மேற்குச் சரிவில் உள்ள பஞ்ச பாண்டவர் குகைகள் மற்றும் சிக்கந்தர் மசூதியின் பின்னால் உள்ள குகை ஆகியவை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அறிவிப்புகளில் மலையின் பெயர் ‘திருப்பரங்குன்றம் மலை’ என்றும், அதில் சிக்கந்தர் மசூதி உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையை ‘சிக்கந்தர் மலை’ என அழைக்கப்பட்டதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. பிரிவி கவுன்சில் தீர்ப்பில் 170 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில், தர்கா மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதி கோயிலுக்கு சொந்தமானது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒருவருக்கு தனி வீட்டுக்கு பெயரிடும் சுதந்திரம் இருக்கலாம், ஆனால் முழு நகரத்தையும் அவர் விரும்பிய பெயரில் அழைக்க வற்புறுத்த முடியாது. அதேபோல், முழு திருப்பரங்குன்றம் மலையையும் தர்கா பெயரில் குறிப்பிட முடியாது.
ஆடு, கோழி பலியிடுதல் தொடர்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற கந்தூரி விழாவில் எந்தவித பலியும் இடம்பெறவில்லை. 2024 டிசம்பர் 31 அன்று நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் கோயில் நிர்வாகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனால், உரிமையியல் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும் வரை எந்த வகையான பலியிடலும் அனுமதிக்கப்படாது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை 172.2 ஏக்கர் பரப்பளவில் மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட இடங்களில் பிராணிகளை கொண்டுசெல்லுதல் அல்லது அசைவ உணவு சமைத்தல், உண்ணுதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.
இதனை மீறி அனுமதி வழங்குவது சட்ட விரோதம் ஆகும் என்பதால், மலையில் ஆடு, கோழி பலியிடுவது முழுமையாக தடை செய்யப்படுகிறது.
இத்துடன், ரம்ஜான் மற்றும் பக்ரீத் நாட்களில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தலாம் எனவும், அது முருகன் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாரம்பரிய படிக்கட்டுகளை பாதிக்கக் கூடாது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், மூன்று நீதிபதிகளில் இருவர், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதும், அசைவ உணவு சமைத்தலும், வழங்கலும் தடை செய்யப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், திருப்பரங்குன்றம் மலை “சிக்கந்தர் மலை” என அழைக்கப்பட கூடாது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.