பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இதற்குப் பின் நாம் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காஸா மக்கள் கவலையடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி, 2007ம் ஆண்டு முதல், இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பாலஸ்தீன விடுதலை அமைப்பான, ஹமாஸ், கடந்த ஆண்டு அக்டோபர், 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் நடத்தும் தற்போதைய போரின் தொடக்கப் புள்ளி இதுதான். ஹமாஸை அழிப்பதே தனது முதன்மையான நோக்கம் என்ற கோஷத்துடன் இஸ்ரேல் போரைத் தொடங்கியது.
போரில் இதுவரை 37,000க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது காசான் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதம் ஆகும். அதேபோன்று 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரில் படுகாயமடைந்தனர். யுத்தம் காரணமாக 23 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினி மற்றும் தொற்று நோய்கள் அவர்களைத் தொடர்கின்றன. காசா பகுதி கிட்டத்தட்ட தரைமட்டமாகிவிட்டது.
போர் தொடங்கி 269 நாட்களுக்குப் பிறகு, இந்தப் போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி பதில் அளித்துள்ளார். “ஹமாஸ் ஒரு சித்தாந்தம், ஹமாஸ் ஒரு கட்சி, அது மக்களின் இதயங்களில் வேரூன்றியுள்ளது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று அவர் கூறினார்.
போர் தொடங்கி 8 மாதங்களுக்குப் பிறகு இதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஹமாஸின் சுரங்கப்பாதைகளையும், அதன் உயர்மட்ட போராளிகளையும், தலைவரையும் அழித்து, தாங்கள் வைத்திருந்த 240க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் 8 மாதங்களுக்குப் பிறகும் இந்த இலக்கை அடைய இஸ்ரேல் போராடி வருகிறது.
நிலைமை இவ்வாறிருக்கையில் சுமார் 80% பாலஸ்தீன மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காஸாவுக்கான ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் கோக் இதனைத் தெரிவித்துள்ளார்.
“10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தில் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு போதுமான உதவி கிடைக்கவில்லை. எனவே, போர் நிறுத்தம் அவசியம்” என்று காக் கூறினார்.
அதேபோன்று ஐ.நா.வால் நடத்தப்பட்ட பள்ளியின் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஐநா நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் நுசிரத்தில் பள்ளியை நடத்தி வருகிறது. இஸ்ரேல் இந்தப் பள்ளியைத் தாக்கியது. மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைத் தாக்கக்கூடாது என்பது சர்வதேச போர்ச் சட்டம். எனினும் இந்த தாக்குதலின் மூலம் இஸ்ரேல் விதியை மீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், “இதன் பின்னர் எங்களுக்கு எங்கும் போவதற்கு இடமில்லை” என காஸா மக்கள் கவலையடைந்துள்ளனர். கிழக்கில் தாராஜ் மற்றும் துஃபா மற்றும் மேற்கில் டெல் அல்-ஹவா, சப்ரா மற்றும் ரிமால் ஆகிய இடங்களில் நடந்த சண்டையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முடியவில்லை என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post