“2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றிபெறும். அந்த வெற்றிக்காக முருகனின் ஆசீர்வாதமும் துணையும் நிச்சயமாக இருக்கும்,” என பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருவள்ளூர் அருகேயுள்ள ஒண்டிக்குப்பம் பகுதியிலுள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் தற்போது சாதாரணமல்லாத சூழ்நிலை நிலவுகிறது. நேற்று முன்தினம், சூரியனார் கோயிலில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய கட்டிடம், சில மணி நேரங்களுக்குள்ளாகவே இடிந்து விழுந்தது. பக்தர்கள் யாத்திரை செல்ல வேண்டிய இந்த இடத்தில், தற்போது மருத்துவர்கள் யாத்திரை செல்கின்றனர்.

இதற்குக் காரணம், திமுக அரசு தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது. உதாரணமாக, வேலூர் அரசு மருத்துவமனையில் 35 மருத்துவர்கள் இருப்பதற்கான தேவை இருந்தபோதும், தற்போது 8 பேரே பணிபுரிந்து வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு தேவையான மகப்பேறு சேவைகள் குறைவாக உள்ளது. இதேபோல், இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 35 புதிய அரசு கல்லூரிகளில் கூட, ஒரு பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.

மருத்துவக் கல்லூரிகள், பள்ளிக் கல்வி துறை, அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வகையில் பல துறைகளிலும் தோல்வியடைந்தது தான் இந்த தமிழக அரசு.

முருக பக்தர்கள் மாநாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும், திமுக கூட்டணிக் கட்சிகளும் பதட்டத்துடன் செயல்படுகின்றனர். வேங்கைவயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலந்ததாக தகவல்கள் வந்தபோதும், அதற்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் எந்தவொரு கண்டன நிகழ்வையும் நடத்தவில்லை. ஆனால், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிராக அவர் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக இணைந்து வெற்றிபெறும். அந்த வெற்றிக்கு முருகன் நிச்சயமாக துணையாக இருப்பார்,” என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

Facebook Comments Box