பாஜக கூட்டமைப்பிலிருந்து விலகிய பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்

பாஜக கூட்டமைப்பிலிருந்து விலகிய பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்

பாஜக கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். அதையடுத்து, அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்துக்கு சென்று, அவரை நேற்று மாலை நேரில் சந்தித்தார்.

முன்னதாக நீண்ட காலமாக பாஜக ஆதரவு நிலைப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பாஜக மீது நம்பிக்கையுடன் இருந்தார். 2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாலும், பாஜக கூட்டணியில் தொடர்வதாகத் தொடர்ந்து தெரிவித்தார்.

தற்போது, அதிமுக பாஜக கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி இயக்கத் தொடங்கியுள்ளது. அந்த கூட்டணி அறிவிக்கப்படும் வேளையில், ஏற்கனவே கூட்டணியில் இருந்த தன்னை அழைக்காமல் விலக்கியது வருத்தமளிக்கிறது என ஓபிஎஸ் வெளியுறுத்தியிருந்தார். மேலும், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரை விமான நிலையத்தில் வரவேற்கும் வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதனால், பாஜக கூட்டணியில் தொடர்வது தொடர்பாக ஓபிஎஸ் குழப்பத்தில் இருந்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பின், ஊடகங்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “இன்றைய அரசியல் சூழ்நிலை, தமிழகத்தின் எதிர்கால பாதை மற்றும் மக்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒருமனதாக, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனி எங்கள் குழு NDA கூட்டணியில் இடம்பெறாது. தமிழகமெங்கும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்,” என்றார்.

அதேவேளை, எதிர்கால கூட்டணி தொடர்பாக இப்போது முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அரசியல் சூழ்நிலைப் பார்க்கப்பட்ட பிறகு தான் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். “யாரையும் வீழ்த்தவேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம்; யாரை வாழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை மக்கள் அறிந்திருப்பதால் அதை நாம் தனியாக விளக்கத் தேவையில்லை,” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதே நாளன்று காலை சென்னை அடையாறில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது. பின்னர், மாலை நேரத்தில் ஸ்டாலினின் இல்லத்துக்கு சென்று, 30 நிமிடங்களுக்கும் மேல் அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் இருந்தனர்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது:

“அரசியலில் நிலையான எதிரிகள் இல்லை; நிலையான நண்பர்களும் இல்லை. இது தான் அரசியல் வரலாறு. தேர்தல் நேரத்தில் யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதற்கான எந்த வரம்பும் இல்லை. கூட்டணி அமைத்து வென்றவர்கள் உள்ளனர், தோல்வியடைந்தவர்களும் உள்ளனர்.

நான் NDA-விலிருந்து வெளியேறிய பிறகு, பாஜகவிலிருந்து யாரும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. எனக்கு எனது சுயமரியாதை முக்கியம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வழிகாட்டுதலிலேயே 25 ஆண்டுகள் பணியாற்றியவன் நான். மக்களவையில் கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பிய போது, மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து நிதி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஜனநாயகத்தில் இது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை நான் தொடர்ந்து அறிக்கைகள் வாயிலாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறேன்,” என்றார்.

Facebook Comments Box