மாணவர் விடுதிகளின் தரத்தை உயர்த்தாமல் பெயரை மாற்றினால் போதுமா? – நயினார் நாகேந்திரன்
மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை புறக்கணித்து, பெயரை மட்டும் மாற்றுவதால் சமூகநீதியை நிலைநாட்ட முடியுமா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் கள்ளர் சீரமைப்பு, சீர்மரபினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளை, ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற ஒரே பெயரில் இணைக்கும் திமுக அரசின் விளம்பர முயற்சி பொருளற்றதாகும். இது முழுவதும் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செயல்.
‘ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ நன்றாக ஓடுமா’ என்ற நகைச்சுவை வசனம்போல, போதுமான ஆசிரியர்கள், குடிநீர், கழிப்பறை, தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ள அரசு மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்தாமல், பெயரை மட்டும் மாற்றி வைத்து சமூகநீதியை நிலைநாட்ட முடியுமா என்பதை முதல்வர் ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.
அதேபோல், பொதுவெளியில் சாதிய அடிப்படையிலான கருத்துக்களை வைக்கும் தலைவர்களை கட்சியில் வைத்துக் கொண்டு, சாதி சார்ந்த இயக்கங்களுடன் கூட்டணி வைத்து, சாதி ஒழிப்பை பேசும் போலித்தனமான அரசியல் நடத்தும் திமுகவுக்கு, பல போராட்டங்களாலும் தியாகங்களாலும் பெற்ற சமூகப் பாதுகாப்பை பாதிக்க எந்த உரிமையும் இல்லை.
சிதிலமடைந்து, பராமரிப்பின்றி உள்ள அரசு விடுதிகளை சீரமைப்பதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டும்; வெறும் பெயர் மாற்றத்தின் மூலம் குறைகளை மறைக்கும் முயற்சி ஒரு நல்ல தலைமைக்கு ஏற்றதல்ல. எனவே, முதல்வர் ஸ்டாலின் சமூகநீதி விடுதி என்ற பெயர் மாற்றத் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும். பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கும் அரசு மாணவர் விடுதிகளை சீரமைப்பதில் ஆளும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.