அவசரத்தில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு: எல்.முருகன், நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழக அரசு சார்பில் நேற்று அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை மத்திய அமைச்சரும், பிற அரசியல் தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்:
தமிழில் புதிய பெயர்கள் சூட்டி, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி காலம் கழிக்கும் திமுக அரசின் அடுத்த முயற்சியாகவே இந்த மாநிலக் கல்விக் கொள்கை வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து தமிழில் வெளியிட்டிருக்கும் இந்த கல்விக் கொள்கையே புரியாத வகையில் உள்ளது.
இருமொழிக் கொள்கையை அமல்படுத்தப் போவதாக இருந்தால், தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை கூறும் மூன்றாவது மொழி விதியை திமுக அரசு ஏற்றுக்கொள்கிறதா? இதுவே திமுகவின் சமூக நீதியா? தாய்மொழி வழிக் கல்வியை தேசியக் கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது.
தமிழகப் பள்ளி மாணவர்கள் எண்களை அடையாளம் காண சிரமப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அரசு பள்ளிகளில் தரமின்மை காரணமாக, கூலித் தொழிலாளிகளும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு பங்கு நிதி வழங்கியும், அதைச் செலுத்தாததால் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க நிர்பந்திப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்:
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து பேசி, பின்னர் மாணவர் நலனைப் போல காட்டி மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, மாணவர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக் கண்டு பயந்து, அவசரமாக தேசியக் கல்விக் கொள்கையை நகல் எடுத்து மாநிலக் கல்விக் கொள்கையாக வெளியிட்டுள்ளது. அதேசமயம், அதில் தேசியக் கல்விக் கொள்கையின் பல முக்கிய அம்சங்களை சேர்க்காதது, மத்திய அரசின் மீதான அரசியல் விரோதத்தைக் காட்டுகிறது.
விசிக கோரிக்கை – பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் எம்.பி.:
மாநிலக் கல்விக் கொள்கையில் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது தவறான முடிவு. இது உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வியின் தரத்தை பாதிக்கும். இந்த முடிவை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.