தோல்வி பயத்தில் திமுக பல திட்டங்களை அறிவித்து வருகிறது – பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் குற்றச்சாட்டு

தருமபுரி: வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தோல்வி பயத்தில் திமுக அரசு தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. கே.பி. ராமலிங்கம் தலைமையில் பாப்பாரப்பட்டி நகரிலிருந்து சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை கட்சியினர் பேரணியாக சென்றனர். பின்னர் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின், 3 ஆண்டுகளுக்கு முன்பு பாரத மாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தாம் உட்பட 11 பேரும் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டதாக ராமலிங்கம் நினைவுகூர்ந்தார். அந்த வழக்கில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அவர் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் பூமித்தாய் தெய்வமாக வணங்கப்படுகிறார். எனவே, இது ஆலயம் தான்; நினைவாலயம் என்ற பெயரை மாற்றி, ஆலயம் என சட்டபூர்வமாக நிலைநாட்டுவோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கும் செல்வோம்,” என்று தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவியைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார். “அந்த மாணவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அடிப்படை மரியாதை கூட அறியவில்லை. அவரது நடவடிக்கையால் ஆளுநர் அவமானப்படுத்தப்பட்டார். ஆனால் ஆளும் கட்சியும், அவர்களை சார்ந்தவர்கள் அதனை ஆதரித்து பேசுகிறார்கள்” என்று விமர்சித்தார்.

திமுக குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசு இன்று தோல்வி அச்சத்தில் தள்ளாடுகின்றன. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்பதை உணர்ந்து கொண்டு தான், எந்த பொருளாதார மதிப்பீடும், கட்டமைப்பும் இன்றி, ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் முயற்சிகள். கடந்த 4 ஆண்டுகளில் செய்யாதவற்றை மீதமுள்ள சில மாதங்களில் செய்வதாக காட்டுவது அரசியல் நாடகம் மட்டுமே” என்று குற்றம்சாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box