இல. கணேசனுக்கு மரியாதை நிகழ்ச்சி – முதல்வர் ஸ்டாலின் உள்பட கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனுக்கு அஞ்சலியும் புகழஞ்சலியும் செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சார்பில் ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் பாஜக தேசிய தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாஜக நேரில் அழைப்பு வழங்குகிறது. அதற்கான பகுதியாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை சந்தித்து முதல்வருக்கான அழைப்பினை இன்று வழங்கினார். அடுத்ததாக அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் பாஜக நேரடி அழைப்பை வழங்க உள்ளது.

குறிப்பாக, பாஜகவின் மூத்த தலைவராக இருந்து மாநிலத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இல. கணேசன் (80), கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தி.நகரில் உள்ள இல்லத்தில் தவறி விழுந்து தலையில் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை உயிரிழந்தார். அப்போது தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Facebook Comments Box