“பாஜக கொள்கை எதிரி என்றால், உங்கள் கொள்கை என்ன?” – விஜய்யிடம் ஹெச்.ராஜா கேள்வி

“பாஜக கொள்கைக்கு எதிரி என்று சொல்கிறீர்கள், ஆனால் உங்களுடைய கொள்கை என்ன?” என தவெக தலைவர் விஜய்யிடம் தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை மாநாட்டில் விஜய் தேவையில்லாமல் பாஜக பற்றி பேசியுள்ளார். முதலில் தமிழ்நாட்டின் அரசியலைப் படிக்க வேண்டும், அதன் பிறகு தான் கருத்து சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதிப்பதற்குப் பிறகு, தமிழ்நாட்டுக்கு விஜய் செய்தது என்ன?

ஓட்டு கேட்க விரும்பினால் முதலில் தமிழ்நாட்டு அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். பாஜக கொள்கைக்கு எதிரி என்றால் இருக்கட்டும்; ஆனால், உங்களுக்கே என்ன கொள்கை இருக்கிறது? பாஜகவை தவறாக விமர்சிக்க வேண்டாம், அதற்காகவே அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார் ஹெச்.ராஜா.

மேலும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “இன்று உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்று வருகிறார். அப்படி இருக்கும் போது, யாராவது ஒருவர் ‘மிஸ்டர் பி.எம்’ என்று அழைத்தால் மக்கள் ரசிக்கமாட்டார்கள். அவர் உலக நாடுகளும் மக்களும் விரும்பும் ‘மாஸ்டர் பி.எம்’ ஆக உள்ளார்.

விஜய் அரசியலில் புதியவர். அவர் வந்தாலே எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக இன்று வலிமையான கட்சியாக வளர்ந்து வருகிறது. 2026 தேர்தலில் ஆளுங்கட்சியுடன் போட்டியிடப்போவது பாஜக கூட்டணி தான். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது; ஆனால் தாமரை மலரப்போகிறது, அதையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு மலரும், அதைப் பார்த்தே ஆக வேண்டும் விஜய்.

விஜய்க்கு வசனம் எழுதியவர்கள் ‘அங்கிள் மிஸ்டர் பி.எம்’ என்று எழுதிக் கொடுத்தனர்; அதைத்தான் அவர் வாசித்துள்ளார். பாஜக கூட்டணி பொருந்துகிறதா, பொருந்தவில்லையா என்பது குறித்து அவருக்கு எந்த அறிவும் இல்லை. கச்சதீவை பற்றி பேசியதே அவர் அரசியல் அறிவு குறைவானவர் என்பதற்கு உதாரணம். மாநாட்டில் ஒரு கொடியை கூட சரியாக நாட்டு முடியவில்லை. ஒரு மாநாட்டை நடத்த முடியாதவர்கள் எப்படி ஆட்சியை நடத்துவார்கள்?” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Facebook Comments Box