“மாநில மக்களின் உயிர்களை பாதுகாப்பீர்” – தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்:
“சென்னை கண்ணகி நகரில் சனிக்கிழமை காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றேன். தாயை இழந்து துயரத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளைப் பார்க்கும் பொழுது மனம் உடைந்தது.
தனது மனைவியை இழந்து வாடும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது கணவர் நிலைகுலைந்து நிற்கிறார். குடும்பத்தினரும், சக ஊழியர்களும் பரிதவிப்பதை கண்டு மிகுந்த வேதனை ஏற்பட்டது.
இந்த மரணம் முற்றிலும் தவிர்க்கக்கூடியதாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பே அந்தப் பகுதியில் பழுதடைந்த மின் கம்பி குறித்து மக்கள் புகார் அளித்திருந்தும், அதைக் கவனிக்காததால், மழை காரணமாக நீர் தேங்கி கம்பி தெரியாமல் போனது. அதில் கால் வைத்ததும் வரலட்சுமி உயிரிழந்தார். உண்மையில் அவர் பலரது உயிரைக் காப்பாற்றியதாகக் கூட சொல்லலாம். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் அவர் உயிரிழந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆகவே, தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடும் போது அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மழைக்காலத்தில் பாதுகாப்பான பூட்ஸ், குப்பை அகற்றும் போது கையுறைகள், நோய் தொற்றுகளைத் தடுக்கும் முகக் கவசங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
‘சிங்கார சென்னை’ என்கிறார்கள், ஆனால் சிறிய மழையிலேயே நீர் தேக்கம், தூர்வாரப்படாத கால்வாய்கள் காரணமாக நகரம் சிதைந்துவிடுகிறது. இந்த மழையிலேயே பலி எடுக்க ஆரம்பித்தால், வெள்ளம் வந்தால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.
மழைநீர் வடிகால்கள், சாலைகள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட சிக்கல்களை கவனிக்காமல், அரசியல் பாகுபாடுகளுடன் ‘மாநில உரிமை காப்போம்’ என்ற பிரசாரம் மட்டும் நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலில் ‘மாநில மக்களின் உயிர்களை’ காப்பாற்ற வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.