நெல்லை பூத் கமிட்டி மாநாட்டுக்கு போலீஸ் கெடுபிடி: ஆர்ப்பாட்டம் நடத்தும் பாஜக அறிவிப்பு
திருநெல்வேலில் நடைபெறவுள்ள பூத் கமிட்டி மாநாட்டிற்கு காவல்துறையின் கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால், மாநகர காவல்துறை நிர்வாகிகள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி மண்டல அளவிலான பாஜக பூத் கமிட்டி மாநாடு வரும் 22-ம் தேதி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்காக பந்தல் மற்றும் மேடை அமைப்புகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கேட்டபோது, பதாகைகள் வைக்க நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பதாகைகள் வைக்க போலீசார் அனுமதி மறுத்ததாகவும், அனுமதி கோர சென்ற நிர்வாகிகளை ஒருமையில் பேசியதாகவும் கூறி, மாநகர காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துபலவேசம் வெளியிட்ட அறிக்கையில், மாநாடு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என பேசிய மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமாரை கண்டித்து, வண்ணார்பேட்டையில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
- தச்சநல்லூர் காவல் சரகத்தில் 22-ம் தேதி நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அறிவுறுத்தலின் படி, மாநாட்டில் விளம்பர பதாகைகள் அமைக்கும்படி மாநாடு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
- பாஜக சார்பில் உண்மைக்கு மாறிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்கனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகரம் முழுவதிலும் விதிமுறைகளை மீறி பதாகைகள் வைக்க அனுமதி கோரப்பட்டது.
- நீதிமன்ற உத்தரவுப்படி, சட்ட விதிகளின்படி பதாகைகள் வைக்க வேண்டும்; விதிமுறைகளை மீறி பதாகைகள் வைக்க அனுமதி இல்லை, அவற்றை அகற்றப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.