தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் தலைவரும், முதல்வர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமி தான் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சி. எனவே கூட்டணியின் தலைவரும், முதல்வர் வேட்பாளரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தான் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் நெல்லையிலிருந்து திருச்சி வந்த அவர், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“பாஜக இந்தியா முழுவதும் 1200 எம்.எல்.ஏ.க்களையும், 330 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட பெரிய கட்சி. பாஜக–அதிமுக கூட்டணி பொருந்தாது என விமர்சிப்பவர்கள், முதலில் தங்கள் கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர்கள் உள்ளனர் என்பதை சொல்லட்டும்.

திமுக அரசு மக்களால் விரும்பப்படாத அரசாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், போதைப்பழக்க அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமைகள் போன்றவை அதிகமாகியுள்ளது. எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார் என்ற செய்தி முற்றிலும் வதந்தி. அவர் சுதந்திரமாக இருக்கிறார். இத்தகைய வதந்திகள் பெரும்பாலும் தமிழ்நாட்டில்தான் பரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் தலைவரும் முதல்வர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமிதான். பிரதமர் இனிமேலும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். திமுகவின் பி-டீமாக பலர் செயல்படுகிறார்கள். திமுக ஆட்சி இல்லாமல் செய்வதே எங்கள் குறிக்கோள். கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதில் ஊடகங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. பலமான கூட்டணி அமைக்காமல் இருந்தாலும், நிச்சயமாக தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் ஏற்படும். திமுக அரசு வீழ்த்தப்படும்.

ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணியில் இணையவாரா? என்ற கேள்விக்கு – திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பதிலளித்தார்,” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box