தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றன – பாஜக தகவல்
தமிழகத்தில் செயல்படும் 22 பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி வருகின்றன என தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“பாரத நாட்டின் உயர் கல்வித் துறையை முன்னேற்றவும், மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2020-ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது.
ஆனால், திமுக அரசு இந்த தேசிய கல்விக் கொள்கைக்கு மேடைகளில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. எனினும், அண்மையில் அந்த அரசே வெளியிட்ட மாநில பள்ளிக் கல்விக் கொள்கையில், தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
பள்ளிக் கல்வி நிலைமையே இப்படியிருக்க, தற்போது தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்களுக்கு உதவும் கல்விக் கொள்கையை திமுக கட்சி அரசியல் நோக்கில் எதிர்த்தாலும், பல்கலைக்கழகங்கள் தங்களது நடவடிக்கைகளில் கல்விக் கடன் வங்கி உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றதன் மூலம் ஆராய்ச்சி நிதி, வளாக உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல துறைகளில் பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. திமுக அரசின் ஆதரவின்றியும், மாநில பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி, அதன் பலன்களை நேரடியாக மாணவர்களுக்கு வழங்குவது பாராட்டத்தக்கது. ஆனால், திமுக அரசு மலிவு அரசியலுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் தனது நேரத்தை வீணடித்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.