அதிமுக ஒன்றிணைப்பு முயற்சி பாராட்டத்தக்கது: நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன் மேற்கொள்ளும் முயற்சி வரவேற்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“செங்கோட்டையன் கூறியவை அதிமுகவின் உள்கட்சி விவகாரம். அவர் யாருடைய சார்பாகவும் பேசவில்லை; தன்னுடைய கருத்தைத் தானே கூறியுள்ளார். ஒருகாலத்தில் அமைச்சராக இணைந்து இருந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் பேசிக் கொண்டு முடிவு செய்ய வேண்டும்.

அதிமுகவில் ஒற்றுமை நிலவினால், திமுக ஆட்சியை விரட்டுவது சாத்தியம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம். அவருடைய முயற்சியை நான் வரவேற்கிறேன். அதிமுக இணைப்பு பற்றி பேச வேண்டியது பழனிசாமிதான். தேவைப்பட்டால் அவருடன் நேரடியாக பேசுவேன். ஆரம்ப காலம் முதலே அதிமுக ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன்.”

அதனைத் தொடர்ந்து அவர் ஜிஎஸ்டி குறித்து கூறியதாவது:

“ஜிஎஸ்டி வரிகள் மக்கள் நலனுக்காக மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக 5, 12, 18, 28 சதவிகிதமாக இருந்த வரிகள் தற்போது திருத்தப்பட்டு, 90 சதவிகிதம் பொருட்களுக்கு 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வரிச்சுமை குறைந்துள்ளது; பொருட்கள் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி என்பது மத்திய அரசு மட்டுமே தீர்மானிப்பதல்ல. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொள்ளும் கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில்தான் வரி நிர்ணயங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே இது மாநிலங்களின் ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்ட முடிவாகும்.”

தமிழக அரசை குறிவைத்து அவர் கூறியதாவது:

“முதல்வர் ஐந்து முறை வெளிநாடு சென்றுள்ளார். ஒவ்வொரு முறை சென்றும் பெரும் முதலீடுகள் வந்துவிட்டதாக அறிவிக்கிறார். ஆனால் அதுகுறித்து வெள்ளை அறிக்கை தரும்படி கேட்டால், அதற்கு பதில் அளிக்காமல், பாஜக மாநிலத் தலைவர் பொய் சொல்கிறார் என திமுக அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சிறு தொழிற்சாலைகளுக்கான மின்சாரச் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் தமிழகத்தில் அதிகம் உள்ளது. இதிலிருந்து மாற்றம் தேவை. அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.”

மேலும், “அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் உள்ளன. கடைசி ஒரு மாதத்திலேயே கூட பெரிய மாற்றங்கள் வரலாம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும். திமுகவை எதிர்த்து, மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நல்லதொரு மாற்றம் நடைபெறும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

Facebook Comments Box