“டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” – நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “டிடிவி தினகரன் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நிர்வாகிகளுக்கான இருவார சேவைப் பயிற்சி முகாம் ஈச்சனாரியில் இன்று (செப்.6) தொடங்கியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய நாகேந்திரன் கூறியதாவது:
“செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நலத்திட்ட உதவிகளை வழங்கும் சேவை முகாம் நடைபெறும். பிரதமர் மோடியின் பிறந்தநாள் முதல் காந்தி ஜெயந்தி வரை பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும்.
நான் யாரிடமும் அகந்தையுடன் நடந்துகொள்ளவில்லை. என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகிய பின்பு, தினகரன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பல்ல. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேவையில்லாமல் தினகரன் இழுத்துக்கொள்கிறார். பாஜக எப்போதும் கூட்டணியை வலுப்படுத்துவதே நோக்கம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே என் கருத்து.
அதிமுகவில் பழனிசாமி, செங்கோட்டையன் தொடர்பான பிரச்சினை அவர்களுக்குள் உள்ள உட்கட்சிச் சிக்கல். அதில் நான் கருத்து சொல்லமாட்டேன். பாஜக எப்போதும் பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடாது. கூட்டணியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைப்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் மீண்டும் கூட்டணிக்கு வந்தால் நல்லதே. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
முன்னாள் தலைவர்களுடன் எனது செயல்பாட்டில் வித்தியாசம் உள்ளது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருக்காது. மாநிலத்தில் நன்மைகள் பெற வேண்டுமெனில், முதல்வர் தேசியக் கட்சியுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழகம் பிரதமர் மோடியை நம்பியே வாக்களிக்கும். எனவே அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
என்னை மாநிலத் தலைவராக நியமிக்கும் முன்பே என் மகன் நயினார் பாலாஜி பாஜகவில் இருந்தார். எனவே இது வாரிசு அரசியல் அல்ல.”
செய்தியாளர்கள், “அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பாஜக இயக்குகிறதா?” என்று கேட்டபோது, “பாஜக யாரையும் இயக்குவதில்லை. அனைவரும் ஒன்றாக இருப்பதே எனது விருப்பம்” என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.
தினகரனின் குற்றச்சாட்டு என்ன?
முன்னதாக, மதுரையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “எங்களை என்.டி.ஏ கூட்டணியில் சேர்த்தது அண்ணாமலைதான். அவர் நீக்கப்பட்டதே எங்களுக்கு அதிர்ச்சி.
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அணுகுமுறை எங்களை அதிருப்தியடைய வைத்தது. கூட்டணிக் கட்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இதே நிலை எங்களுக்கும் வரும் என்பதால் கூட்டணியை விட்டு விலகினோம்.
எங்களின் முதன்மை கவனம் என்.டி.ஏ கூட்டணியில்தான். அங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையெனில் வேறு கூட்டணியில் சேருவோம். அது எந்த கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லை. எவருக்கும் அடிபணிய மாட்டோம்” என்று தெரிவித்தார்.