“வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்ததில் பிரதமர் மோடிதான் காரணம்” – தமிழிசை கருத்து
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை வரவழைத்ததற்கு பிரதமர் மோடிதான் பிரதான காரணம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (செப்.8) அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் முடித்து இன்று தமிழகத்தில் திரும்பியுள்ளார். முதலீடுகளை நாம் கவர்ந்துள்ளோம் என்று அவர் கூறுகிறார். ஆனால் பிரதமர் மோடி தான் வெளிநாடுகளுக்குச் சென்று நம் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தியதால் தான் முதலீடுகள் வந்துள்ளன. அதற்கு முன்பு எவ்வளவு முதலீடு வரவழைக்கப்பட்டது? தமிழகத்தில் எவ்வளவு முதலீடு நடந்தது? என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எனவே இது முதல்வரின் சாதனை அல்ல, முழுக்க பிரதமர் மோடிதான் காரணம்.
தமிழகத்தில் சட்டமும் ஒழுங்கும் மோசமான நிலைமையில் உள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை கைது செய்வது, அவமானப்படுத்துவது பாராட்டப்படுவோம் என்று காவல்துறை அதிகாரிகள் நினைத்து செய்கிறார்கள். எனவே முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை சரியான பாதையில் நடத்த வேண்டும். காங்கிரஸ் நேற்று தென்பகுதியில் கூட்டம் நடத்தியது. கூட்டம் நடத்துவதற்காவது தென்பகுதி நினைவில் வந்தது என்றால் அதில் மகிழ்ச்சி.
ஓட்டு திருடுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று ப.சிதம்பரம் சொல்கிறார். ஆனால் கள்ள ஓட்டுக்கு தொடக்கம் முதலே பெரும் அங்கீகாரம் தந்தது திமுகதான். கள்ள ஓட்டை கலாச்சாரமாக்கியது திமுக. அப்படிப்பட்ட கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டு இவ்வாறு பேசுவது சிதம்பரத்திற்கு பொருந்தாது.
பாஜக ஆட்சி புரியும் மாநிலங்கள் ஆமை போல் வளர்ச்சி அடையும் என்று சொல்கிறார்கள். ஆனால் 17 மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி நடத்துகிறோம். காங்கிரஸ் ஆட்சி வந்த இடங்கள் சீரழிந்து விட்டதால் மக்கள் அவர்களை நிராகரித்தனர். மக்களுக்காக போராடினோம் என்று செல்வப்பெருந்தகை சொல்கிறார். உண்மையில் போராடியிருந்தால் கூட்டணியில் இருந்து விலக தைரியம் இருக்க வேண்டுமே?
கம்யூனிஸ்டுகள் தங்கள் கொள்கைகளை மறந்து திமுகவுடன் இணைந்துள்ளனர். திருமாவளவனுக்கும் பட்டியல் சமூக நலனில் அக்கறை இல்லை; திமுகவுடனான கூட்டணியே அவருக்கு முக்கியம். திமுக தான் கூட்டணி கட்சிகளின் கொள்கைகளை ஒதுக்கி தங்களுடன் வைத்துக் கொள்கிறது. இது பெரிய தவறு.
நாளை ஒரு தமிழர் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாகிறார். அது நாடுக்கும் நமக்கும் மறக்க முடியாத நாள். ஆனால் திமுக, காங்கிரஸ் ஆகியவை அந்த தமிழருக்கு எதிராக வாக்களிக்கின்றன. ஜெர்மனியில் தமிழர்களுக்கு அங்கீகாரம் தருவோம் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் டெல்லியில் அதிகாரம் தர என்ன செய்கிறீர்கள்? தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினை வருங்கால தமிழ் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணிதான். அதிமுகக்குள் பிரச்சினைகள் வந்தால் அதைக் கட்சியே சரி செய்து விடும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.