“திமுகவின் பிரசார நிகழ்ச்சிக்கே அரசு பள்ளிகள் பலியாகின்றன…” – அண்ணாமலை குற்றச்சாட்டு
அரசுப் பள்ளிகளையும் திமுக தனது விளம்பர நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்துகிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில் உள்ள நூற்றாண்டு நிறைவு கொண்ட நடுநிலைப் பள்ளி, கடந்த 9ஆம் தேதி திமுக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்துவதற்காக மூடப்பட்டது. திமுகவின் பிரசார நாடகங்களுக்கு அரசு பள்ளிகள் கூட பலிகடாவாக மாறுவது கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை மோசமான நிலையில் உள்ளது. அந்தத் துறையின் அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியை மூடி, திமுகவின் விளம்பர நிகழ்ச்சி நடத்தப்படுவது அதிகார துஷ்பிரயோகம் தான்.
திருச்சியில் நிகழ்ச்சி நடத்துவதற்காக வேறு இடங்கள் இல்லையா? ஏழை, எளிய மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிதான் எளிதில் பலியாக்கப்படுகிறதா?
மக்கள் விரோதமான இந்த திமுகவின் செயல்களுக்கு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதில் சொல்லுவார்கள்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.