பிரிந்த அதிமுக தலைவர்களை மீண்டும் இணைக்க பாஜக முயற்சி: ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைக்கும் திட்டம்
அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற தலைவர்கள் மீண்டும் இணைந்தால்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் கூறி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி, மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருந்தார். இதையடுத்து, அவரின் கட்சி பொறுப்புகள் நீக்கப்பட்டன. ஹரித்வாருக்கு செல்கிறேன் எனக் கூறிய செங்கோட்டையன், உண்மையில் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, நிர்மலா சீதாரமனைச் சந்தித்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த சந்திப்பில், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமெனில், ஒருங்கிணைந்த அதிமுகவுடன் மட்டுமே களமிறங்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் மற்றும் தினகரனை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாஜக உயர்மட்டம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், “பிரிந்தவர்கள் திரும்ப வரமாட்டார்கள்” எனக் கறாராக நிலைபெற்று இருக்கும் பழனிசாமியுடனும் சமரசம் செய்வதற்கான பேச்சுவார்த்தையை பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (செப்டம்பர் 11) டெல்லி புறப்பட்டு, அமித் ஷா, ஜே.பி. நட்டா, பி.எல். சந்தோஷ் ஆகியோருடன் ஆலோசிக்கிறார். அதன் பின்னர், ஒபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இதன் மூலம், கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை சீர்செய்து, பிரிந்த அதிமுக பிரிவுகளை ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணியுடன் 2026 தேர்தலை சந்திக்க பாஜகத் திட்டமிட்டிருப்பது வெளிப்படுகிறது.